திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 26ஆம் தேதி சென்னை தி. நகர் ஹோட்டலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
லோக்சபா தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்குதல் பணிகளை செய்ய சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினரும் மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது பூத் கமிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பொதுச்செயலாளர் துரைமுருகன். வரும் 26ஆம் தேதி தி. நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியாகராய நகர் ஹோட்டல் அகார்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பணிகள் குறித்த இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதால் மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.