கவர்னர் எல்லா விஷயங்களிலும் தமிழகத்திடம் தோற்றுக்கொண்டிருக்கிறார்: கே.எஸ்.அழகிரி

கவர்னர் எல்லா விஷயங்களிலும் தமிழக சட்டமன்றத்திடம் தோற்றுக்கொண்டிருக்கிறார் என்றும், சுப்ரீம் கோர்ட்டே கவர்னரை கொட்டு கொட்டி இருக்கிறது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரை கவர்னர் ஒரு பிரச்சினையாக மாறி இருக்கிறார். ஒரு கவர்னர் பிரச்சினைக்குரியவராக மாறி இருப்பது இதுவரை தமிழக வரலாற்றில் இல்லை. சுப்ரீம் கோர்ட்டே, “நாங்கள் கேள்வி கேட்ட பிறகு நீங்கள் ஏன் கோப்புகளை திருப்பி அனுப்பினீர்கள்” என்று ஒரு கொட்டு கொட்டி இருக்கிறது. கவர்னர் ஏன் கையெழுத்து இடவில்லை என்பதை விளக்குவதற்கு இன்னும் காலஅவகாசம் வேண்டும் என்று மத்திய உளவுத்துறை அமைச்சகம் மண்டியிட்டு சொல்லி இருக்கிறது.

அப்படி என்றால், கோப்புகளில் ஏன் கையெழுத்து இடவில்லை என்று கவர்னர் முடிவு செய்யவில்லையா? எந்த முன்யோசனையும் இல்லாமல்தான் கையெழுத்து இடாமல் இருந்தாரா? எனவே, தமிழக சட்டமன்றம் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எல்லா விஷயங்களிலும் கவர்னர் அதனிடம் தோற்றுக்கொண்டிருகிறார். எவ்வளவு தோல்வி அடைந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் கிறுக்குத்தனம் செய்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிப்பது குறித்த விஷயத்தில் கவர்னர் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளார். இதற்காக அவர் வெட்கி தலைகுனிய வேண்டும். அ.தி.மு.க. – பா.ஜ.க பிளவு என்பது கற்பனையானது, பொய்யானது. ஏற்கனவே அவர்கள் முடிவு செய்து நடத்தும் ஒரு நாடகம் அது. அவர்களுக்குள் எந்த அளவிற்கு கருத்து வேறுபாடு என்பதையாவது அ.தி.மு.க. சொல்ல வேண்டும்.
என்ன காரணத்துக்காக கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம் என்பதற்கான காரணத்தை அ.தி.மு.க. தெரிவிக்க வேண்டும். இதில் இருந்தே இது ஒரு தவறாக கதை வசனம் எழுதப்பட்ட நாடகம் என்பது தெரிகிறது.

பா.ஜனதா அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல் முறைகேடுகள், விவசாயிகளின் விரோத போக்கு, அதானி, அம்பானி உள்ளிட்ட சில தொழில் அதிபர்களின் சொத்துக்குவிப்புக்கு துணை போவது உள்ளிட்டவற்றை ஆதாரத்துடன் பட்டியலிட்டு பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி டிசம்பர் கடைசி வாரத்தில் சிறு பிரசுரமாக வெளியிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.