பாபா ராம்தேவின் பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், நவீன மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக தொடரப்பட்ட வழக்கில், அந்நிறுவனத்தை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது. இப்படியான விளம்பரங்களை மீண்டும் வெளியிட்டால் கடும் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அதேபோல அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் பதஞ்சலி நிறுவனத்தை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து கண்டனம் தெரிவித்திருக்கிறது. எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. அதேபோல இதுபோன்ற தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பதஞ்சலியின் பொருட்கள் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னரும் இப்பொருட்களின் தரம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதாவது, இப்பொருட்கள் முழுக்க முழுக்க இயற்கை மூலப்பொருட்களை கொண்டே உற்பத்தி செய்யப்படுகிறது என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பப்பட்டன. எனவே பதஞ்சலி தயாரிப்பிலிருந்து 82 பொருட்களை எடுத்து ஹரித்வார் ஆயுர்வேத மற்றும் யுனானி அலுவலகம் ஆய்வு செய்தது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருந்தன. இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதாக சொல்லப்பட்ட தயாரிப்புகளில் 31 சதவிகிதம் அந்நிய நாட்டின் மூலப்பொருட்கள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல 82 தயாரிப்புகளில் 40 சதவிகித பொருட்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. மேலும் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் தரமற்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவை ராணுவ கேண்டீன்களில் விற்க தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.