விவசாயத்தை அழித்தால் சோறுக்கு எங்கே போகப்போகிறோம். சோறு போடும் கடவுளான விவசாயிகளை சிறையில் அடைப்பதா? என்று பா.ம.க.தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் அந்த திட்டத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்தும் மேல்மா கூட்ரோட்டில் கடந்த சில மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், 125 நாளுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் 20 விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரும் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என முறையிட்டனர். அதனை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் 6 விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை கலெக்டர் பா.முருகேஷ் ரத்து செய்து ஆணையிட்டார்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி பா.ம.க. சார்பில் அதன் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.தலைமையில் மேல்மா கூட்ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.பேசியதாவது:-
முன்னேற்றம் என்ற பெயரில் விவசாயத்தையும், விளைநிலங்களையும் அழிப்பது ஏமாற்று வேலை. அதை கண்டிக்கின்றேன். தமிழ்நாட்டில் கடந்த 45 ஆண்டுக்கு முன்பு விவசாய நிலத்தின் பரப்பளவு 48 விழுக்காடு இருந்தது. இப்போது 42 லட்சம் ஏக்கர் விளைநிலம் அழிக்கப்பட்டுள்ளதால் 36 விழுக்காடாக குறைந்து உள்ளது.
விவசாயத்தை அழித்தால் சோறுக்கு எங்கே போகப்போகிறோம். அந்த யோசனை கூட உங்களுக்கு இல்லையா?
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செங்கம், போளூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலம் இருக்கிறது. அங்கு சிப்காட் தொடங்கலாமே. ஆனால் முப்போகம் விளையும் மண்ணை அழிப்பதா? இதை ஒருபோதும் பா.ம.க அனுமதிக்காது. விவசாயத்தை அழித்து எந்த முன்னேற்றமும் நமக்கு வேண்டாம். இதேபோன்று கும்மிடிப்பூண்டியில் அறிவுசார் நகரம் தொடங்கியுள்ளனர். அங்கு 1,700 ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படுகிறது. விளைநிலங்களை அழித்து தான் இவற்றை தொடங்க வேண்டுமா? இதனை எதிர்த்து போராடினால் குண்டர் சட்டத்தில் கைது செய்வதா? சோறு போடும் கடவுளான விவசாயிகளை சிறையில் அடைப்பதா? மண்ணுக்காக போராடியவர்களுக்கு குண்டர் சட்டத்தில் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மண்ணை பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டியது நமது கடமை ஆகும். மண்ணை காக்க போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அனைத்து விவசாயிகளையும் விடுதலை செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.