94 லட்சம் ஏழை குடும்பங்களின் மேம்பாட்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் தேவை என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறினார்.
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மாநில அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் ஏழைகள் அதிகம் வசிப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அரசு கூறியுள்ளது. எனவே மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி மக்களை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசை பீகார் மாநில அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநில மந்திரி சபையில் நேற்று சிறப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதை முதல்-மந்திரி நிதிஷ்குமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
அதில் மேலும் அவர், ‘சாதிவாரி கணக்கெடுப்புப்படி 94 லட்சம் ஏழை குடும்பங்கள் மாநிலத்தில் உள்ளன. அவர்களின் மேம்பாட்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் தேவை. இது மிகப்பெரிய நிதி என்றாலும், மத்திய அரசு உதவினால், இந்த பணிகளை செய்து முடிக்கலாம்’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.