தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். பஞ்சாப் வழக்கை மேற்கொள் காட்டி அரசு வழக்கறிஞர்கள் வாதத்தை முன் வைப்பார்கள் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ‘‘நிறுவனங்களின் நாயகர்- கலைஞர்’’ என்ற தலைப்பிலான சிறப்பு புகைப்பட கண்காட்சியை நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியில், கலைஞர் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் கலைஞர் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை விளக்கும் விதமாக 41 அரசு நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அரங்குகளில் அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி குறித்த புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு பார்வைக்காக, பல்வேறு கல்லூரி மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர். இதுமட்டுமின்றி, இந்த நிகழ்ச்சிக்கான சிறப்பு மலரை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்.
இதனையடுத்து அரங்குகளை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-
முதல்வர் தரப்பில் இருந்து 10 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த மசோதாக்கள் மீதான பதில்கள் ஏதும் இன்னும் வரவில்லை. நிச்சயமாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில், நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அதேபோல், மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினால், நாங்கள் அதை மீண்டும் திருப்பி அவருக்கு அனுப்பும் போது அதற்கு அனுமதி தர வேண்டும் என அங்கே குறிப்பிட்டு உள்ளோம். எனவே எந்த மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டாலும், அதனை மீண்டும் அனுப்புகிற பொழுது, இரண்டாவது முறை மறுப்பதற்கு வாய்ப்பு கிடையாது. மேலும் பஞ்சாப் வழக்கை மேற்கோள் காட்டி, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.