22 மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்யும் யுபிஎஸ்சி தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன்படி, பணி இடங்கள் ஒதுக்கப்படும். இந்த ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் கடந்த மே மாதம் நடைபெற்றது. இத்தேர்வை எழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்து தேர்வில் கலந்துகொண்டனர். இந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளின் வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வழங்கப்படும். பொதுவாக இதுபோன்ற தேர்வுகளில் வெற்றியடைய தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடையளிப்பது மிக அவசியம். குறிப்பிட்ட நேரத்துக்குள் அணுகுவதற்கு ஆங்கிலம் அல்லது இந்தி சரளமாக அறிந்திருப்பது அவசியமாகிறது. இது இந்தி தெரியாத பிராந்திய மொழி மாணவர்களுக்கும் இந்தி தெரிந்த மாணவர்களுக்கும் பாகுபாட்டை ஏற்படுத்தும் முறையாக அமைவதாக ஒவ்வொரு தேர்விலும் தேர்வு எழுதுபவர்கள் குற்றம்சாட்டுவது வழக்கம்.

இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது இந்தி தெரியாத மாநில மக்களுக்கு அநீதி விளைவிப்பதாகவும் மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் இடம்பெறுகின்றன. இது இந்தி மொழி தெரிந்தவர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் மாநில மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு பாரபட்சமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்துவதால் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறியுள்ள பாலமுருகன், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பாக வரும் டிசம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.