‘அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது திருட்டு போல ஒரு குற்றம்தான். இந்த குற்றத்தில் ஈடுபடுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பிற சட்டங்களில் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த சையது அலி, தொண்டியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமிநாராயணன் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு 2014-ல் கண்காணிப்பு குழு அமைத்தது. குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டார். மாநில வழிகாட்டுதல் குழுவில் தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். இக்குழு மாதம் தோறும் கூடி நீர் நிலைகள், பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான புகார்களை விசாரிக்கிறது. குழுவின் நோட்டீஸ் பெறுபவர்கள் உரிய அதிகாரி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பூமி வழங்குகிறது. பேராசையை திருப்திபடுத்த முடியாது. பேராசைக்காரர்கள் அரசு நிலங்கள், நீர் நிலைகள் மற்றும் நெடுஞ்சாலை நிலங்களை ஆக்கிரமித்து, பொது நிலங்களை பயன்படுத்துவதற்கான அடிப்படை உரிமைகளை மீறுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுச் சொத்துக்கள், நீர் நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் மக்களின் நலனுக்காக பாதுகாக்கப்படுவதையும், பொதுமக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.
பெரியளவில் ஆக்கிரமிப்பு செய்பவர்களிடம் ஆதாயம் பெறும் பேராசை நபர்கள் போலி ஆவணங்களை உருவாக்கி அரசு சொத்துகளுக்கு பட்டா வழங்கும் விபரீதமான சூழ்நிலையும் உள்ளது. சமீப காலமாக நிலங்களின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்து வருவதால், பேராசை பிடித்தவர்கள் வருவாய் மற்றும் பிற துறை அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தையும் முறியடிப்பதுடன், மக்களின் நலனுக்காக அரசு நிலங்களை பாதுகாக்க வேண்டும்.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலத்தை அபகரிப்பது திருட்டுதான். இதனால் ஆக்கிரமிப்பு இந்திய தண்டனைச் சட்டத்தின்படி மட்டுமல்ல, பிற சட்டங்களின்படியும் குற்றமாகும். மாநில வழிகாட்டுதல் குழு மாதம் ஒருமுறை தவறாமல் கூடி ஆக்கிரமிப்பு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை இணைதளத்தில் வெளியிட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாலோ, கடமை தவறினாலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற 12 வாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம். மனுதாரர் குறிப்பிட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.