சம்பர் மாதம் முழுவதும் அனைத்து வாரங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மையப்பன் லேன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
முதல்வரின் வழிகாட்டுதலின்படி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 5-ஆவது வாரம். ஒவ்வொரு வாரமும் 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகிறது. தேவையைப் பொருத்து கூடுதலாக மருத்துவ முகாம்களும் நடக்கின்றன. இதுவரை 4 வாரங்களில் 8,380 முகாம்கள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து முகாம்கள் நடத்துவதும், 8 ஆயிரத்துக்கு மேல் முகாம்கள் நடத்தி இருப்பதும் இதுவே முதல் முறை. டிசம்பர் மாதம் முழுவதும் அனைத்து வாரங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு முகாமிலும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயன்பட்டாலும் 400 பேர் வரை சளி, சிக்கன்குனியா போன்ற நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. கைவசம் 1,500 கிலோ நில வேம்பு பவுடர், 32 டன் பிளீச்சிங் பவுடர், புகைமருந்து உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சென்னையில் உள்ள மொத்த மழைநீர் வடிகால்களில் 40% அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான காய்ச்சல்தான் தற்போது உள்ளது. இருமல் பாதிப்பு அதிகம் உள்ளது. இது வைரஸ் பாதிப்பு. 20 முதல் 25 நாட்கள் வரை இருமல் உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் இன்று வரை 7,059 பேர் டெங்கு காய்ச்சலால் பாதித்தவர்கள் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நடக்கும் சோதனை அடிப்படையில் 40 முதல் 50 பேர் வரை ஒருநாள் பாதிப்பு இருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கால் வலி, தலை வலி அதிகம் இருந்தது. அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரண்டு சோதனைகள் செய்யப்பட உள்ளன. ராயபுரத்தில் 27 பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டனர். வெறி பிடித்து நாய் இருப்பது குறித்து அறிந்தால் மாநகராட்சி எண்ணுக்கு மக்கள் அழைத்து தகவல் தெரிவிக்கலாம். மாநகராட்சி சார்பில் சென்னையில் உள்ள ஒட்டு மொத்த நாய்கள் கணக்கெடுப்பு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இருந்தனர்.
தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு புதிய கட்டமைப்புகளை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3,172 படுக்கைகள் உள்ளன. 2,500 முதல் 3,000 பேர் வரை உள்நோயாளிகள் உள்ளனர். தென் இந்தியாவிலேயே அதிகமாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் வரை புற நோயாளிகள் வருகிறார்கள். உள் நோயாளிகளுக்கு நல்ல உணவு தரப்பட வேண்டும் என்ற வகையில் புதிய சமையலறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 81 லட்சம் செலவில் பழைய சமையலறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 800 சப்பாத்தி செய்யும் உபகரணம், கொதிகலன் உள்ளிட்ட பல புதிய உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் பணியாற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தங்க இடம் இல்லை, அவர்களுக்கு 18 லட்சம் செலவில் 6 ஓய்வறைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கைப்பேசியை சார்ஜ் செய்யும் உபகரணங்கள் ஒவ்வொரு 5 லட்சம் செலவில் 25 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. படுக்கைகளுக்கு போர்த்தப்படும் போர்வைகள் தினந்தோறும் மாற்றி அமைக்க வேண்டும். அதை பொறுத்தவரை தொடர்ச்சியாக கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 10 லட்சம் செலவில் 6 விதமான வண்ணங்களில் படுக்கை விரிப்புகள் வாங்கித் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, பொதுமக்கள் விழிப்புணர்வு பெற ஒவ்வொரு துறைகளுக்கும் நோய் தகவல் கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே மத்திய அரசு ஒதுக்கீடு செய்ததில் நிரம்பாமல் இருந்த 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மீண்டும் கவுன்சிலிங் நடத்த மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தோம் அதற்கு ஒப்புதல் அளித்ததால், எம்பிபிஎஸ் இடங்கள் முழுவதும் நிரப்பப்பட்டுவிட்டன. முதுகலை பட்டமேற்படிப்புக்கு 404 இடங்களுக்கு 204 இடங்களை தமிழக அரசு நிரப்ப அனுமதி கொடுத்தார்கள். எம்டி, எம்எஸ் முதுகலை படிப்புக்கு 74 இடங்களும், 48 பிடிஎஸ் இடங்கள், டிஎன்பி 11 இடங்கள் காலியாக இருந்தன. இதனை நிரப்ப மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தோம், அதற்கு ஒப்புதல் அளிக்கவே, இன்று கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது’ என்றார்.