இந்தியாவில் முதன் முறையாக ஒரே நாளில் மதுரையில்தான் அதிகபட்ச கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
இந்தியாவில் முதன் முறையாக ஒரே நாளில் மதுரையில்தான் அதிகபட்ச கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-
மதுரை மாவட்டத்தில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் எனது தலைமையில் வெள்ளியன்று மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரை மாவட்டத்தில் கல்வி கடன் கொடுப்பது ரூ.40 கோடி, ரூ.45 கோடி என்பதாக இருந்தது. 2021 ஆம் ஆண்டு நாம் எடுத்த முயற்சி மதுரை மாவட்டத்தில் ரூ. 118 கோடி கல்வி கடன் என்பது கொடுக்கப்பட்டது. நூறு கோடிக்கு மேல் கல்விக்கடன் பெற்றுக்கொடுத்த முதல் மாவட்டமாக மதுரை மாவட்டம் மாறியது.
அதே போல 2022ம் ஆண்டு பெற்றுக் கொடுத்த கல்விக்கடன் என்பது ரூ.138 கோடி. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கொடுக்கப்பட்ட கல்வி கடன் என்பது ரூ.1,100 கோடி அதில் 10 சதவீதம் ரூ.138 கோடி மதுரையில் மட்டுமே பெற்று கொடுத்திருக்கின்றோம். அந்த பெருமை இங்கு உள்ள வங்கி அதிகாரிகளையும், மாவட்ட நிர்வாகத்தையும் சேரும். அவர்களுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று நடந்து முடிந்துள்ள கல்விக்கடன் முகாம் தேசிய அளவில் பெரும் சாதனையை படைத்துள்ளது. நேற்று ஒருநாள் முகாமிலேயே 15 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறெங்கும் இவ்வளவு தொகை ஒரே நாள் முகாமில் வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. கனரா வங்கி 15 நபர்களுக்கு 4 கோடியே 51 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரீஜனல் – 1: 12 பேருக்கு 23 லட்ச ரூபாயும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா -ரீஜினல் -4; ஐந்து நபர்களுக்கு 1 கோடியே 23 லட்சத்து 3 ரூபாயும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஐந்து நபர்களுக்கு 1 கோடியே 90 லட்சத்து 38 ஆயிரம். இந்தியன் வங்கி 20 பேருக்கு 1 கோடியே 25 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும். பேங்க் ஆப் இந்தியா 15 நபர்களுக்கு 92 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயும். பேங்க் ஆப் பரோடா 8 நபர்களுக்கு 2 கோடி 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆறு பேருக்கு 32 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயும், எச்டிஎப்சி வங்கி இரண்டு பேருக்கு 7 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும், பெடரல் பேங்க் ஒரு நபருக்கு 2 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் முகாமில் வழங்கியுள்ளார்கள் மொத்தம் 115 மாணவர்களுக்கு 14 கோடியே 55 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் கல்வி கடனாக முகாமில் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மாணவருக்கு கிடைக்கக்கூடிய கல்வி ஒரு நபர் சார்ந்த விஷயம் அல்ல ஒரு குடும்பம் சார்ந்து, ஒரு தலைமுறை சார்ந்த விஷயம். அந்த வகையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கும் விஷயத்தில் வங்கிகள் இலகுவாக இருக்க வேண்டும். அந்தப் பொறுப்பை மாநில அரசும் மத்திய அரசும் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இதை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் வலியுறுத்துவேன். மேலும் தொடர்ந்து அதை செய்து தர வேண்டும் என்றும் போராடுவேன்.
மாநிலத்திலேயே அதிக கல்விக்கடன் கொடுக்கும் முதல் மாவட்டமாக மதுரையை மாற்றி இருக்கின்றோம். நாடாளுமன்ற கல்வி நிலைக் குழுவில் இதற்காக மிகப்பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளோம். அதற்காக வங்கிகள் இன்றைக்கு பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மாவட்ட நிர்வாகத்தின் பெரும் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.