‘ரிது பந்து’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி வழங்குவதை நிறுத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ள பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா, “பழையக் கட்சியின் கேவலமான அரசியல் வெளிப்பட்டுள்ளது” என்று சாடியுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் ‘ரிது பந்து’ திட்டத்தின் கீழ் விவாசயிகளுக்கு நிதியுதவி அளிக்க வழங்கிய அனுமதியை தேர்தல் ஆணையம் இன்று திங்கள்கிழமை திரும்பப் பெற்றது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் கேவலமான அரசியல் முகம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது. அவர்கள் ‘ரிது பந்து’ பணத்தினை வழங்க விடாமல் தாமதப்படுத்தியிருக்கிறார்கள். இது தொடர்ந்து கொடுக்கப்படும் பணம்தான். தேர்தல் வாக்குறுதியோ, தேர்தலுகாக உருவாக்கப்பட்ட புதிய திட்டமோ இல்லை.
கடந்த 10 பருவங்களில் சுமார் 65 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிஆர்எஸ் அரசு ரூ.72,000 கோடி வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு முறையும் இந்தத் திட்டம் குறித்து புகார் அளித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையை நன்றாக கவனித்து, ரிது பந்து திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்குவது, கடன் தள்ளுபடி போன்றவற்றை நிறுத்திய காங்கிரஸ் கட்சிதான் விவசாயிகளின் எதிரி என்தை மக்கள் உணர வேண்டும். இவ்வாறு கவிதா கூறியுள்ளார்..
முன்னதாக, ரிது பந்து திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுவதை பிஆர்எஸ் கட்சி அதன் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிடக் கூடாது என்று அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது. தெலங்கானாவில் ‘ரிது பந்து’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க கேசிஆர் அரசுக்கு கொடுத்த அனுமதியை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை திரும்பப் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் குறித்து ஆளுங்கட்சி அமைச்சர் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் மீறிப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தெலங்கானாவில் விவசாய செலவுகளை சந்திக்கவும், பயிர் உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ‘ரிது பந்து’ திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு பருவத்துக்கும் தலா ரூ.5,000 என வருடத்துக்கு ரூ.10,000 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் – ஜனவரி பருவத்துக்கான தொகையை வழங்குவதற்கு தெலங்கானாவின் கேசிஆர் அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்ததது. என்றாலும், தேர்தல் நடத்தை விதி நடைமுறைக்கு வந்த பின்னர் பணப் பட்டுவாடா குறித்து விளம்பரப்படுத்த வேண்டாம் என்று அரசிடம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தெலங்கானா மாநில நிதியமைச்சரும், பிஆர்எஸ் கட்சி வேட்பாளருமான ஹரிஷ் ராஜ் ‘ரிது பந்து’ திட்டத்தின் கீழ் பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், திங்கள்கிழமை காலையில் பணம் பட்டுவாடா செய்யப்படும். விவசாயிகள் தங்களின் காலை உணவினை முடிப்பதற்கு முன்பாக அவர்களின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும் என்று தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.