தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உள்ள மூத்த தலைவர்களை கே.எஸ்.அழகிரி மதிப்பதேயில்லை என்றும், அவரை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது கடினம் எனவும் கூறியுள்ளார். கட்சி கூட்டங்களுக்கு முறையாக யாரையும் அவர் அழைப்பதே கிடையாது என்றும் 5 ஆண்டுகளாக தலைவராக இருப்பதால் அவருக்கு சோர்வும், சுணக்கமும் ஏற்பட்டு விட்டது எனக் கூறியுள்ளார்.

பாஜகவை பொறுத்தவரை வேலை போன போலீஸ் அதிகாரியை கட்சியின் தமிழக தலைவராக நியமித்திருக்கிறார்கள் என்றும், அவர் தினமும் ஒரு பொய்யை சொல்லி வருகிறார் எனவும் அண்ணாமலையை தனது பாணியில் சாடினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி கூட சரியாக கொடுப்பதில்லை என்றும் மோடியை திமுக கடுமையாக எதிர்க்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் என்ற முறையில் அழகிரி தீவிரமாக எதிர்ப்பை பதிவு செய்வதே கிடையாது எனவும் குற்றஞ்சாட்டினார். இதனால் கே.எஸ்.அழகிரியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து மாற்றியே ஆக வேண்டும் என்றும் இதுவரை 3 முறையில் கட்சியின் டெல்லி மேலிடத்திடம் அழகிரியை மாற்றுமாறு முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கண்டிப்பாக அழகிரியை மாற்றுகிறோம் என தங்களுக்கு கட்சி மேலிடம் உறுதி கொடுத்திருப்பதாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறார். ப.சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி என பலரும் அழகிரி மீது புகார் கூறியிருப்பதாக தெரிவித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் தேவை என்பது காலத்தின் கட்டாயம் என்றார்.