அமைச்சர் உதயநிதி பிறந்தநாள்: பெற்றோரிடம் ஆசீர்வாதம்!

அடுத்த பிறந்தநாளுக்கு நீங்கள் துணை முதல்வரா என்று செய்தியாளர்களிடம் இருந்து கேள்வி வரவே அதற்கு சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற உடனேயே அவர் அமைச்சராக்கப்படுவார் என்று திமுக இளைஞரணியினர் எதிர்பார்த்தனர். ஆனால் சில மாதங்கள் அவர் எம்எல்ஏவாக மட்டுமே தனது பணிகளை செய்து வந்தார். அமைச்சர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று பேட்டி அளித்தனர். திமுக நிர்வாகிகள் தீர்மானமே நிறைவேற்றினர். தனக்கு என்ன பதவி, பொறுப்பு கொடுத்தாலும் நான் தலைவர் சொல்வதைக்கேட்டு செய்வேன் என்று கூறி வந்தார் உதயநிதி ஸ்டாலின். தலைமைக்கு யாரும் நெருக்கடி தர வேண்டாம் என்றும் கூறினார் உதயநிதி ஸ்டாலின். அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலத்துறை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி உதயநிதிக்கு அளிக்கப்பட்டது. தனது துறை மட்டுமல்லாது முதல்வர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் உதயநிதி ஸ்டாலின். தமிழகம் முழுவதும் பல அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை கொடுப்பார் உதயநிதி ஸ்டாலின். இதனையடுத்து சில மாதங்களில் துணைமுதல்வராக பதவி அளிக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியது.

கடந்த ஜூன் மாதம் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், துணை முதல்வர் பதவி உங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்த உதயநிதி, யார் சொன்னார்கள், எனக்கே வராத தகவல் உங்களுக்கு எங்கிருந்து வந்தது என்று கேட்ட அவர், எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது என்பது தவறான செய்தி என மழுப்பலாக பதிலளித்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை தமிழக முழுவதும் திமுகவினர் உற்சாகமாக இன்று கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். தனது பிறந்தநாளையொட்டி அமைச்சர் உதயநிதி, தனது தந்தையும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். முத்தமிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். எனது பிறந்த நாளை முன்னிட்டு, ஈன்றெடுத்த பெற்றோர் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் – அன்னையார் அவர்களிடமும் இன்று காலை வாழ்த்துகளைப் பெற்றேன். அயராது உழைக்கவும் – அன்பின் வழி நடக்கவும் எந்நாளும் வழிநடத்தும் தாய் – தந்தையரின் வாழ்த்தை பெற்ற மகிழ்வான தருணத்திலிருந்து இந்த நாளை தொடங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

பேரறிஞர் அண்ணா, மறைந்த தலைவர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின். இதனை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நம் அரசியல் வாழ்விற்கு அரிச்சுவடியாகத் திகழும், நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நினைவிடத்தில், என் பிறந்த நாளையொட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினோம். கலைஞர் அவர்கள் வழியில் தமிழ்நாட்டின் மேன்மைக்காக என்றும் உறுதியோடு உழைக்க உறுதியேற்றோம் என்றும் பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சரானபிறகு தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார் உதயநிதி. நலத்திட்ட உதவிகளை அளிக்க வந்த உதயநிதி ஸ்டாலினிடம், இன்றைய தினம் செய்தியாளர்கள் துணை முதல்வர் பற்றி கேள்வி எழுப்பினர். அடுத்த பிறந்தநாளுக்கு நீங்கள் துணை முதல்வர் ஆக நியமிக்கப்பட்டு விடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், அதெல்லாம், தலைவர், முதல்வர் முடிவு, இதில் நான் எப்படிங்க சொல்ல முடியும் என்று கூறினார்.

அமைச்சரானபிறகு வரும் முதல் பிறந்தநாளை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு பதில் அளித்த உதயநிதி, ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அண்ணன் சேகர்பாபு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நான் திருப்திகரமாக எனது பணிகளை செய்து வருகிறேன் என்றும் உதயநிதி தெரிவித்தார். பிறந்தநாளுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு ஒரு செய்தியும் இல்லை. நீங்க வாழ்த்து சொன்னீர்கள் நான் நன்றி கூறுகிறேன் என்று சொன்னார் உதயநிதி. டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இளைஞரணி சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.