அரசியல் வழியில் லட்சியத்தை நோக்கிய பயணம் தொடரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் மகள் துவாரகா குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் நவ. 27 ஆம் நாளை விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக மாவீரர் நாள் என இலங்கைத் தமிழர்களிடையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர் போராட்ட காலத்தில் மாவீரர் நாள்களில் பிரபாகரன் ஆற்றிய உரைகள் குறிப்பிடத் தக்கவை.
இந்த ஆண்டு மாவீரர் நாளில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா, தமிழ் ஒளி என்ற யூ டியூப் சேனலில் காணொலி வாயிலாக மாவீரர் நாளையொட்டிக் கொள்கைப் பிரகடன உரையாற்றுவார் என சமூக ஊடகங்களின்வழி தகவல்கள் பரவின. அறிவித்தபடி, குறிப்பிட்ட நேரத்தில் யூ டியூப் ஒளிபரப்பில் பிரபாகரன் மகள் துவாரகா எனக் குறிப்பிடப்பட்ட பெண்மணி உரையாற்றினார்.
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 34-வது மாவீரர் நிகழ்ச்சியில் துவாரகா பெயரில் காணொளி ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிரபாகரன் மகள் துவாரகா எனக் குறிப்பிடப்பட்ட பெண்மணி அதில் உரையாற்றினார். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த உரையில், துவாராக என்று சொல்லப்படும் அந்தப் பெண் கூறியதாவது:-
தமிழீழத்திற்காக அரசியல் வழியில் தொடர்ந்து பயணிப்போம். நாங்கள் ஒருபோதும் சிங்களத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டியவர்களாக நாம் எல்லோரும் இருக்கிறோம். ஆபத்து, நெருக்கடி, சவால்களை கடந்து நான் உங்கள் முன் தோன்றியுள்ளேன். தமிழீழம் உருவாகும் காலம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தனித்து நின்று போர் புரிய திராணியற்ற அரசு சிங்கள அரசு. தற்போது பண்பாட்டு சீர்கேடுகள் அரங்கேறி வருகின்றன. சட்டத்தின் ஆட்சி இல்லை. ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தால் அரசியல் உரிமைகள் கிடைக்கும் என்று சொன்னார்கள் ஆனால் கிடைக்கவில்லை. ஈழத்தமிழர்களுக்கு ஐநாவும் நீதி வழங்கவில்லை.
தமிழீழத்திற்கு போராடி வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நம் கடமையாகும். இத்தனை ஆண்டுகளாக நமக்கு துணை நிற்கும் அரசியல் தலைவர்கள், தாய் தமிழக உறவுகளுக்கு நன்றி. சிங்கள மக்களுக்கு நாம் என்றுமே எதிரி அல்ல, எதிராக செயல்பட்டதும் இல்லை. பிரபாகரன் குறிப்பிட்டது போல் பாதைகள் மாறினாலும், நமது லட்சியம் மாறாது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழீழம் கோரி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், பிராபரகரன் மகள் துவாரகா பெயரில் வீடியோ ஒன்று வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலமாக, விருப்பப்படும் நபர்களை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வீடியோக்கள் வெளியாகி வருவதை பார்க்க முடிகிறது. எனவே, இதுவும் அத்தகைய ஏஐ வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. துவாராக பெயரில் வெளியாகி இருக்கும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை.
இந்த ஒளிபரப்பின் தொடக்கத்தில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன், போரின்போது உடைப்பை ஏற்படுத்தி பிரபாகரனும் துவாரகாவும் வெளியேறியதாகக் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழர் தேசிய கூட்டமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, அவருடைய மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இந்த நிலையில் மாவீரர் நாளையொட்டி துவாரகா பிரபாகரன் உரையாற்றியுள்ளார். ஆனால், இந்த காணொலியில் தோன்றி உரையாற்றியவர் உண்மையிலேயே பிரபாகரன் மகள்தானா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.