இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி நீக்கம்!

“கிரிக்கட் வாரியத்தை சரிசெய்யும் முயற்சிக்காக நான் கொல்லப்படலாம் என்று அஞ்சுகிறேன்,” என்று ரோஷான் ரணசிங்க கூறினார். இந்நிலையில் பதவி நீக்க நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்குள் அரசியல் தலையீடு காணப்படுவதாகத் தெரிவித்து, இலங்கை கிரிக்கெட் அணியை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த நவம்பர்10ஆம் தேதி நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில், புதிய திருப்பமாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷான் ரணசிங்கவை பதவியில் இருந்து அதிபர் ரணில் விக்ரமசிங்க நீக்கியுள்ளார். கிரிக்கெட் வாரியத்தில் ஊழலை ஒழிப்பதற்காக நான் முயற்சி எடுத்ததற்காக, அதிபர் ரணில் விக்ரமசிங்கே தன்னை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டிய சில மணி நேரங்களிலேயே இலங்கையின் விளையாட்டு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

திங்கட்கிழமை வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக ரோஷான் ரணசிங்க, தான் கொல்லப்பட்டால் அதிபர் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“கிரிக்கட் வாரியத்தை சரிசெய்யும் முயற்சிக்காக நான் கொல்லப்படலாம் என்று அஞ்சுகிறேன்,” என்று ரணசிங்க பாராளுமன்றத்தில் கூறினார். நான் வீதியில் படுகொலை செய்யப்பட்டால் அதற்கு அதிபரும் அவரது தலைமை அதிகாரியும் பொறுப்பேற்க வேண்டும் என ரணசிங்க தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அவரது அலுவலகத்தில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டதைத் தவிர, அதிபர் விக்கிரமசிங்கவிடமிருந்து உடனடி எதிர்வினை எதுவும் இதுவரை இல்லை.

இந்த மாத தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வாரியத்தை நீக்கம் செய்த ரணசிங்க, அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தங்கள் மீதான குற்றச்சாட்டை அவர்கள் நிராகரித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கின்றனர்.

திவாலான இலங்கையில், கிரிக்கெட் வாரியம் பணக்கார விளையாட்டு அமைப்பாகும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த மாத தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் (SLC) ஐ இடைநிறுத்தியது, அதன் விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதாக கூறி இந்த நடவடிக்கையை ஐசிசி மேற்கொண்டது.