விளை நிலங்களை பறிக்கும் திட்டங்களை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்: தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

விளை நிலங்களை பறிக்கும் செய்யாறு சிப்காட், பரந்தூர் வானூர்தி திட்டங்களை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும்! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒன்பதாவது பொதுக்குழுவின் இரண்டாவது கூட்டம் நேற்று (26.11.2023) தஞ்சை மாவட்டம் திருவேரகத்தில் (சாமிமலையில்) நடைபெற்றது. சாமிமலை அலவந்திபுரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், துணைத் தலைவர் தோழர் க. முருகன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி உள்ளிட்ட பேரியக்க நிர்வாகிகளும், தமிழ்நாடு – புதுச்சேரியின் பல பகுதிகளிலிருந்தும் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1

விளை நிலங்களை பறிக்கும் தொழில் திட்டங்களை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! நில ஒருங்கிணைப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்! தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டு உழவர்கள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரங்களை சிதைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அடுக்கடுக்காக பல்வேறு தொழில் திட்டங்களை செயல்படுத்தி வருவதும், அத்திட்டங்களை ஞாயமான முறையில் சனநாயக வழியில் எதிர்த்துப் போராடுவோர் மீது கண்மூடித்தனமான அடக்குமுறையை ஏவுவதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான “சிப்காட்” தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்துகிறோம் என்ற பெயரில், முப்போகம் விளையும் விளை நிலங்களை உழவர்களிடமிருந்து பறிக்கும் படுபாதகச் செயலில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. அதற்கெதிராகப் போராடிய உழவர்கள் மீது 11 வழக்குகளைப் பதிவு செய்து, அவர்களில் 7 பேர் மீது கொடிய குண்டர் சட்டத்தை ஏவி அடக்குமுறை மேற்கொண்ட தமிழ்நாடு அரசு, பொது மக்களிடையே எழுந்த கடும் கண்டனங்கள் காரணமாக 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை மட்டும் விலக்கிக் கொண்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட எட்டுவழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய உழவர் போராளி அருள் ஆறுமுகம், மேல்மா உழவர்களின் அழைப்பிற்கிணங்க இங்கேயே மக்களுடன் தங்கி, அவர்களுக்கு வழிகாட்டி வந்த நிலையில், அதையே கிரிமினல் குற்றம் போல சித்தரித்து, அவர் மீதான குண்டர் சட்ட அடக்குமுறையை கைவிட மறுக்கிறது தமிழ்நாடு அரசு!

இன்னொருபுறத்தில், மதுரை மாவட்டத்தின் மேலூர் வட்டத்தில், அரசுக்கு சற்றொப்ப 1 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட குற்றத்திற்காக மூடப்பட்டுள்ள கிரானைட் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருகின்றது. இதன் காரணமாக, தங்கள் நீர்நிலைகளும், வேளாண்மையும் பாதிக்கப்படும் என்று போராடிய உழவர்களுக்கு வழிகாட்டிய சமூக ஆர்வலர் கம்பூர் செல்வராஜ் அவர்களை, “பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் சமூக விரோதி” என சித்தரித்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்து விளக்கம் கேட்கிறது.

அதுமட்டுமில்லாமல், சென்னையை ஒட்டியுள்ள பரந்தூரில், சற்றொப்ப 20 கிராம மக்களின் 5,500 ஏக்கர் பரப்பளவிலான வேளாண் நிலங்களையும், வீடுகளையும் ஒரேடியாக தரைமட்டமாக்கி விமான நிலைய விரிவாக்கம் செய்ய அரசாணைப் பிறப்பித்துள்ளது. சற்றொப்ப ஓராண்டுக்கு மேல் அறவழியில் போராடி வந்த இப்பகுதி மக்களின் கோரிக்கையைப் புறந்தள்ளிவிட்டு, நிலம் கையகப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கலை தமிழ்நாடு அரசு அறிவித்து, போராட்டக்காரர் களையும் கைது செய்துள்ளது. பல வழக்குகளில் அலைக்கழித்து வருகிறது.

மோடியின் நண்பர் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அழைப்பு விடுப்பதும், அதானியுடன் 35,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்வதும், லூலூ போன்ற பெருங்குழுமங்களை தமிழ்நாட்டில் திணித்து, மண்ணின் சில்லறை வணிகர்களை ஒழிப்பதும் “திராவிட” மாடல் அரசின் செயல்திட்டங்களாக உள்ள நிலையில், மோடி மாடலே திராவிட மாடல் என்பது வெளிப்படுகிறது.

பன்னாட்டு – வடநாட்டு பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்கான தொழில் திணிப்புக்காக, மக்களின் நிலங்களைப் பறிப்பதோடு, அடக்குமுறைகளை ஏவிவிடுவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

அருள் ஆறுமுகம் உள்ளிட்டு, போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், இந்த நாசகரத் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்றும், இதற்காக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த “நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை” திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, வரும் 30.11.2023 அன்று, தஞ்சையில் தொடர்வண்டி நிலையம் அருகில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பது என இப்பொதுக்குழு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது!

தீர்மானம் – 2

திருச்சியில் சித்தா எய்ம்ஸ் நிறுவ தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்க வேண்டும்!

இந்திய அரசின் இந்திய மருத்துவ முறைகள் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்படும் நிதியைப் பெற்று, புதுதில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போல, சித்த மருத்துவதற்கான உயர் சிகிச்சைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையிலான “சித்தா எய்ம்ஸ்” மருத்துவமனையை, திருச்சியில் நிறுவிட, தமிழ்நாடு அரசு முழுவீச்சில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்தி, மிக விரைவாக வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

செங்கல்பட்டில் கட்டப்பட்டு வரும் சித்த மருத்துவ உயராய்வு மையத்திற்கு, மூலவரான திருமூலரின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 3

இசுரேலிய இனவெறிக்கு ஆதரவளிக்கும் கொள்கையை இந்திய அரசு கைவிட வேண்டும்!

பாலத்தீன மக்களின் வரலாற்றுத் தாயகத்தில், மெல்ல மெல்ல யூதக் குடியேற்றங்கள் வழியே உருவான இசுரேல் நாடு, இன்று யூத சியோனிச இனவெறியுடன் செயல்பட்டு, வட அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு, பாலத்தீன மக்களின் தாயகத்தில் மருத்துவ மனைகள் மீதும், மக்கள் வாழ்விடங்கள் மீதும் கொடுந்தாக்குதலை நடத்தி, அப்பாவி பாலத்தீன மக்களை அன்றாடம் கொன்று குவித்து வருகிறது.

போரின் பெயரால் நாள்தோறும் பலியாகி வரும் அப்பாவி மக்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு இரங்கல் தெரிவிப்பதோடு, அனைத்துலக நாடுகள் இதில் தலையிட்டு, இப்போரை நிரந்தரமாக நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறது.

பாலத்தீன மக்களின் ஞாயமான வலி வேதனைகளை உணர்ந்து, அவர்களுக்கு ஆதரவாகவே உலக அரங்கில் செயல்பட்டு வந்த இந்திய அரசு, இப்போது மோடி ஆட்சியின் கீழ் யூத இனவெறி இசுரேல் அரசின் பக்கம் நிற்பது பாலத்தீனியர்களுக்கு இழைக்கும் துரோகம் மட்டுமின்றி, மனித நேயத்திற்கு எதிரானதும் ஆகும். எனவே, மோடி அரசு தன் போக்கைத் திருத்திக் கொண்டு, பாலத்தீன மக்களின் தாயக உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், இசுரேல் அரசின் யூத இனவெறி ஆக்கிரமிப்புகளுக்கும், இனப்படுகொலைகளுக்கும் எதிராகவும் உலக அரங்கில் செயல்பட வேண்டுமென, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 4

திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை உழவர்களிடமிருந்து வாங்கிய கரும்புக்கு முழு விலையையும் தமிழ்நாடு அரசு தலையிட்டு வாங்கித் தர வேண்டும்!

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் செயல்பட்டு வந்த ஆருரான் சர்க்கரை ஆலை மூடப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன. அந்த ஆலையையும், அதற்குரிய விளை நிலங்களையும் கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஆனால், இச்சர்க்கரையின் பழைய முதலாளியும், விலைக்கு வாங்கியுள்ள இன்றைய முதலாளிகளும், நான்காண்டுகளுக்கு முன் சர்க்கரை ஆலைக்குக் கொடுத்த, கரும்புக்குரிய விலையை இதுவரை தரவில்லை.

தமிழ்நாடு அரசு தலையிட்டு, கரும்பு விற்றதற்கான நிலுவைத் தொகையை உழவர்களுக்குப் பெற்றுத் தர பேச்சு வார்த்தை நடத்தியது. கால்ஸ் நிறுவனம் ஒவ்வொரு உழவருக்கும் கிடைக்க வேண்டிய விலையில், 50 விழுக்காடு மட்டும் தருவோம் என்கிறது. கடனில் மூழ்கி பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் உழவர்களோ, தாங்கள் உற்பத்தி செய்து விற்ற கரும்புக்கு முழு விலையும் வேண்டுமெனக் கோரி, சற்றொப்ப ஓராண்டாக ஆலை வாயிலில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மேற்படி கால்ஸ் நிறுவனம் திருமண்டங்குடி ஆலையில் சாராயம் உற்பத்தி செய்வதற்கான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டுள்ளது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் நேரடியாகத் தலையிட்டு, உழவர்கள் விற்ற கரும்புக்கு உரிய முழுத் தொகையையும் கால்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தர ஏற்பாடு செய்ய வேண்டுமென்று, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது!

இதே திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலையின் பழைய நிர்வாகம், கரும்பு உழவர்களின் விளை நிலங்களை அடமானம் வைத்து, பல கோடி ரூபாய் வங்கிக் கடன் வாங்கியுள்ளது. இதுபோல், பினாமியாகக் குற்றச் செயலில் ஈடுபட்டு உழவர்களின் நிலங்களை அடமானம் வைத்து, வங்கிக் கடன் வாங்கிய விவரம் அந்த உழவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு தலையிட்டு, இக்குற்றச் செயலுக்காக ஆரூரான் சர்க்கரை ஆலையின் பழைய நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுகு்க வேண்டும் என்றும், அக்கடனை உழவர்களிடம் வங்கிகள் வசூலிக்காமல் தடுக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.