அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை டிச.8ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் 2006 மே 15 முதல் 2010 மாா்ச் 31 வரையிலான காலத்தில் 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக 2012-ஆம் ஆண்டு பிப். 14 ஆம் தேதி அமைச்சா் தங்கம் தென்னரசு, அவரின் மனைவி மணிமேகலை உள்ளிட்டோா் மீது விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை அமா்வு நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவரையும் அவரின் மனைவியையும் விடுவித்து உத்தரவிட்டது.
வழக்கிலிருந்து தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை விடுவித்த நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யும் பொருட்டு, சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தாா். இந்த வழக்கு தொடா்பாக பதில் அளிக்க தங்கம் தென்னரசு அவரின் மனைவிக்கு உத்தரவிடப்பட்டது.
தாமாக முன்வந்து எடுத்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்றம் தன்னை விடுவித்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. தலைமை நீதிபதி தான் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும். தலைமை நீதிபதி உத்தரவிடும் நீதிபதிதான் வழக்கை எடுக்க முடியுமென அமைச்சர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை டிச.8ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.