கியான்வாபி மசூதியில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 3 வாரங்கள் அவகாசம் கேட்டு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தொல்லியல் துறை இன்று செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துள்ளது.
தொல்லியில்துறையின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அமித் ஸ்ரீவத்சா, விரிவான அறிக்கையினைத் தொகுத்து இறுதி செய்வதற்கு கூடுதல் அவகாசம் வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை நீதிமன்றம் இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
சுமார் 100 நாட்கள் நீடித்த இந்த ஆய்வு ஒரு மாதத்துக்கு முன்பு நிறைவடைந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆய்வின் சிக்கலான மற்றும் முழுமையான தன்மையினைக் காரணம் காட்டி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் துறை பலமுறை அவகாசம் கேட்டிருக்கிறது. கடைசியாக நவ.18-ம் தேதி அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தொல்லியல் துறை 15 நாட்கள் அவகாசம் கேட்டிருந்த நிலையில், நீதிமன்றம் 10 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தது. அந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனிடையே தொல்லியல் துறை கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 2021-ல் 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசூதியின் ஒரு பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதா என்பதைத் கண்டறிய மசூதியின் வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.