இன்னும் எத்தனை நாட்கள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார்: நாராயணன் திருப்பதி

இன்னும் எத்தனை நாட்கள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கின் கீழ் கடந்த ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஜூன் 21ஆம் தேதியன்று பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார் செந்தில் பாலாஜி. கடந்த ஜூலை 17ஆம் தேதியன்று காவிரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்ட நிலையில் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக உள்ளதால் அவரை ஜாமீனில் விட்டால் சாட்சியங்கள் அழிக்கப்படும் என அமலாக்கத் துறை வாதத்தை ஏற்று நீதிபதி ஜெயச்சந்திரன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இதனிடையே செந்தில் பாலாஜிக்கு கடந்த 22ஆம் தேதி 11 ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி, செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் சதீஷ் சந்திரா, திரிவேதி ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு உள்ள உடல் நிலை பிரச்னைகளால் ஸ்டோக் வர வாய்ப்புள்ளதாக அறிக்கை சொல்வதாகவும், தேவையான பரிசோதனை செய்ய ஏதுவாக ஜாமீன் தர வேண்டும் என்றும் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் முகுல்ரோத்தகி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேவையான பரிசோதனைகள் ஏற்கெனவே செய்தாகிவிட்டது. செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பு தீவிரமானதாகவோ அல்லது உயிருக்கு ஆபத்தானதாகவோ தெரியவில்லை எனத் தெரிவித்தனர்.

இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. சாதாரண ஜாமீன் மனு தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி, வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவ ஜாமீன் மனுவை திரும்பப் பெற்று, வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அவரது அமைச்சர் பதவியை பறிக்க பரிந்துரை செய்தார் ஆளுநர் ரவி. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது இலாகாக்களை மட்டும் மாற்றிக் கொடுத்துவிட்டு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என உத்தரவிட்டார். இந்த நிலையில், இன்னும் எத்தனை நாட்கள் தமிழக அமைச்சர் சிறையில் இருப்பார் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பா நாராயணன் திருப்ப்தி, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உடல் நிலையை காரணம் காட்டி பிணை கேட்டிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்ச நீதி மன்றம். பிணை கொடுக்கும் அளவிற்கு உடல்நிலை அப்படி ஒன்றும் மோசமில்லை என்றும் தேவையெனில் வழக்கமான பிணை மனுவை விசாரணை நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் அறிவுறுத்தல். மீண்டும் புழல் சிறைக்கு செல்வாரா அமைச்சர் செந்தில் பாலாஜி? இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் இருப்பார் தமிழக அமைச்சர்? இது தான் திராவிட மாடலா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.