2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் ரூ.2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன! மாற்றுத்திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் – மெட்ரோ ரெயில் பயணம் – விமானப் பயணம் அழைத்துச் சென்றோம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் வாங்கப்பட்ட புதிய வால்வோ பேருந்துகளில் முதல் பயணம் அவர்களுக்கான மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றேன். இன்று துவக்கி வைத்த இந்தப் பயணத்தில்தான் எத்தனை புன்னகைகள்!. என தெரிவித்துள்ளார்.