காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதில் குறிப்பாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்கு தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களின் நலன் சார்ந்த இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதற்கு மாறாக, தனியாரிடம் ஒப்படைத்து விட்டு மாநகராட்சி ஒதுங்கிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மாநகராட்சியின் முடிவு கண்டிக்கத்தக்கது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காலை உணவு திட்டத்தை தனியாரிடம் வழங்கி அதற்கு ரூ.19 கோடியை தாரைவார்ப்பது நியாயமல்ல என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனால் பள்ளி மாணவர்களை விட தனியாரே நலம் பெறுவார்கள் என்றும், தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து, அதற்கான சோதனை முயற்சியாக சென்னையில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது என்றும் அன்புமணி கூறியுள்ளார்.
சென்னை மாநகரைப் பொறுத்தவரை கடந்த ஆட்சியிலேயே காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்றும், அட்சய பாத்திரம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு மாநகராட்சியோ, அரசோ அந்த நிறுவனத்திற்கு நேரடியாக எந்த நிதியும் வழங்கவில்லை என்றும் அதேநேரத்தில் ஆளுனர் மாளிகை மூலமாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது என்றும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். அதன் காரணமாகத் தான் காலை உணவுத் திட்டத்தை அரசே நடத்தும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்றும் ஆனால், இப்போது அதே திட்டத்தை ரூ.19 கோடியை தனியாருக்கு கொடுத்து செயல்படுத்தச் சொல்வதான் நோக்கம் என்ன? என்றும் அதிமுக அரசின் செயலுக்கும், திமுக அரசின் செயலுக்கும் என்ன வித்தியாசம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியாருக்கு வழங்கப்படவுள்ள நிதியைக் கொண்டு இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதில் என்ன சிக்கல்? என்றும் தனியாரால் நடத்தப்பட வேண்டிய மது வணிகத்தை தமிழக அரசு விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது என்றும் ஆனால், அரசே செய்ய வேண்டிய கல்வி சேவையையும் உணவு வினியோகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கின்றன. இதுவா மக்கள்நல அரசுக்கு அடையாளம்? என்றும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்களின் நலன் சார்ந்த காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்படக் கூடாது என்று தெரிவித்துள்ள அன்புமணி, இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் தீர்மானம் திரும்பப்பெறப்பட வேண்டும் என்றும், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநகராட்சி மூலமாகவே உணவு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.