தலைநகரம் சென்னை தண்ணீரில் மிதக்கிறது, இனியும் தற்பெருமை பேசாமல் மழை நீரை வெளியேற்ற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ள காரணத்தால் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு நாள் மழைக்கே சென்னை மிதக்கிறது என அதிமுக. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதேசமயம், திமுக அரசு தரப்போ, பெரும்பாலான இடங்களில் மழை விட்டதுமே, மழைநீர் வடிந்துவிட்டது, செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் அடையாறு ஆற்றில் வருவதால், மேற்கு மாம்பலம் பகுதியில் இருந்து வடிகால் வழியாக அடையாறுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதனால், அங்கு மட்டும் மழைநீர் தேங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
கடந்த ஓரிரு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தலைநகரம் தண்ணீரில் மிதக்கிறது. வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், அரசு மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் என அனைத்து பகுதிகளிலும் மழைநீர் புகுந்துள்ளது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் பகுதியில் ஒரு உயிர் பலியாகியுள்ளது.
20 செ.மீ மழை பெய்தாலும் மழை நீர் தேங்காது என சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ள நிலையில் தற்போது சென்னையில் பரவலாக 10 செ.மீ மழையும் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 20 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. அதற்கே சென்னை முழுவதும் தத்தளிக்கிறது. மழை நீர் வடிகால்கள் அமைக்க ரூபாய் 4000 கோடி பேக்கேஜ் என கூறி தற்பெருமை பேசிய திமுக அரசு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? இனியும் தற்பெருமை பேசாமல் மழை நீரை வெளியேற்ற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.