இலங்கையில் மதவெறியை பாஜக விதைப்பது வேதனை அளிக்கிறது: திருமாவளவன்

இலங்கையில் தமிழ் தேசிய உணர்வை மங்க செய்து மதவெறி உணர்வை பாஜக விதைத்து வருவது வேதனை அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் வெல்லும் ஜனநாயக மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, திருவண்ணாமலைக்கு இன்று (நவ.30) வந்த தொல்.திருமாவளவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் என்ற பெயரில் திருச்சியில் டிசம்பர் 23-ம் தேதி, மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் தேசிய பொது செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

வெல்லும் ஜனநாயகம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்றாலும், வெல்லும் இந்தியா என்ற பொருளை உணர்த்துவதாக, இண்டியா கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் என உரக்க சொல்வதாக அமைகிறது. 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலை உள்ளன. ராகுல்காந்தியின் பாத யாத்திரைக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே பெருகி இருக்கிறது. இந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆட்சி பீடத்தில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே இண்டியா கூட்டணியின் தேர்தல் யுக்தியாகும். இந்த ஒற்றை நோக்கத்தை வலியுறுத்தும் மாநாடாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயக மாநாடு அமையும்.

சென்னையில் நாளை (டிச.1) காந்தி மண்டபம் அருகே திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் மணி மண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து நாட்டு மக்களுக்கு ஒப்படைக்க உள்ளார். திராவிடம், பவுத்தம் என்ற அரசியலை விதைத்த பெருமைக்குரியவர் பண்டிதர் அயோத்திதாசர். அவருக்கு மணிமண்டபம் எழுப்ப வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையை ஏற்று மணி மண்டபத்தை முதல்வர் திறந்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கும், தமிழக அரசுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றி.

கனமழைக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றாலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை களம் இறக்கி, மழை நீரை வடிந்திட செய்யவும், மக்களுக்கு துணையாக இருந்து உதவிடவும் முதல்வர் ஆணையிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. தமிழகம் முழுவதும் அரசு இயந்திரம் பொறுப்புடன் செயல்படுவது பாராட்டுக்குரியது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் விரைந்து குணமாகி, வீடு திரும்ப வேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை சிங்கள இன வெறி அரசு மேற்கொண்டுள்ளது. ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், உலக நாடுகளும் வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்துக்களுக்காக தொண்டாற்றுகிறோம் என சொல்லும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடியெடுத்து வைத்து, இன உணர்வை நீர்த்து போக செய்யும் வகையில் மத உணர்வை பரப்பி வருகின்றனர். இந்து கோயில்கள் இடிக்கப்படுவதை பற்றி, அவர்கள் கவலை படவில்லை. தமிழர்களின் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டு பவுத்த விகார்கள் கட்டுவதன் மூலம் சிங்களர்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர். இந்து கோயில்கள் இடிக்கப்படுவதை பாஜக பொருட்படுத்தாமல், தமிழ் தேசிய இன உணர்வை மங்க செய்து, மத வெறி உணர்வை விதைத்து வருவது வேதனை அளிக்கிறது.

தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை சிங்களர்களின் ஆக்கிமிப்பில் இருந்து இந்திய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள், அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை மூலமாக நெருக்கடியை தருவது என்பது பாஜகவின் செயல்திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. இதனை அவ்வபோது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வெளிபடுத்துகிறார். தேர்தல் நேரத்தில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.