உலகத்திலேயே பொய் சொல்வதற்கு விருது திமுக அரசுக்குத்தான் கொடுக்க வேண்டும்: ஜெயக்குமார்

உலகத்திலேயே பொய் சொல்வதற்கு என்று ஒரு விருது கொடுக்க வேண்டும் என்றால் திமுக அரசுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவாது:-

உலகத்திலேயே பொய் சொல்வதற்கு என்று ஒரு விருது கொடுக்க வேண்டும் என்றால் திமுக அரசுக்குத்தான் கொடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் என்றார்கள், நிறைவேற்றிவிட்டார்களா.. ஒன்னும் செய்யவில்லை. அதுபோலத்தான் மழை நீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறுவதும். காதில் பூ சுற்றும் கதையாகத்தான் முதல்வரின் அந்த அறிக்கை உள்ளது. அந்த மாதிரி நிறைவேற்றியிருந்தால் வெள்ளம் வடிந்து இருக்கும். 4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்கிறீர்கள். அதனால் என்ன தாக்கம்.. விளைவு என்ன? கொளத்தூர் தொகுதியிலேயே தண்ணீர் நிற்கிறது. அடுத்த மழைக்கு தண்ணீர் நிற்காகது என இப்போ சொல்வார்கள். இவர்கள் ஆட்சி இருக்கும் வரை மக்களுக்கு கஷ்டம் தான்.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் முடிவை தன்னிச்சையாக எடுக்க முடியாது. கலெக்டர் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்பார். துறை செயலாளர்கள் அமைச்சர்களிடம் கேட்பார்கள். அமைச்சர்கள் முதல்வரிடம் கேட்டு வானிலை அறிக்கை பொறுத்து விடுமுறை அளிக்கும் முடிவை எடுப்பார்கள். ஆனால் இந்த அரசு தூங்கிவிட்டது. வானிலை அறிக்கையை படிக்காமல் காலேஜ் எல்லாம் திறந்து இருக்கிறது என்றால் இந்த அரசு எந்த அளவு விழிப்பாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

எம்.ஜி.ஆர் நினைவு நாளில் கலைஞர் நூற்றாண்டுவிழா கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தில் அதிமுக சார்பில் ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுகோளும் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நினைவு நாள்.. தமிழ்நாடே துயரப்படும் தேதி.. அந்த தேதியில் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நடிகர் சங்கத்திற்கு அதிக நிதி ஒதுக்கி கொடுத்து நிலம் வாங்கி கொடுத்தவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் மட்டும் இன்றி தமிழ்நாட்டில் மாபெரும் முதல்வராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட ஒரு முதல்வர். அவர் நினைவு நாளில் நடத்த வேண்டாம் என்று சொன்னால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். தேதி மாற்றம் குறித்து சொல்லவில்லை. திமுக நிர்பந்தத்தின் பேரில் நீங்கள் பண்ணுகிறீர்கள். உண்மையில் எம் .ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவைத்தான் கொண்டாடியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.