திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டிற்கு இந்த மழையே சாட்சி: எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டிற்கு இந்த மழையே சாட்சி” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையை பொறுத்த அளவில் நேற்றிரவு 4 மணி நேரத்தில் சராசரியாக 6.7 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக கொளத்தூரில் 62.4 மி.மீ, அம்பத்தூரில் 54.3 மி.மீ அளவு மழை பதிவாகியிருந்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்தது. பெரும்பாலான இடங்களில் மழை நின்றவுடன் தேங்கியிருந்த நீர் வடிந்துவிட்ட நிலையில், மாம்பலத்தின் சில இடங்களிலும், வேளச்சேரியிலும் மழை நீர் இன்னும் வடியாமல் இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக மார்தட்டும் விடியா திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. நிர்வாகத் திறனற்ற “திமுக மாடல் ரோடு”, “இரண்டரை ஆண்டு கால விடியா திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி” என்பது போல் இன்று சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது. விடியா திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு, இந்த சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத மழைநீர் வடிகால் திட்டமும் அதனால் பரவும் டெங்கு உட்பட பல பருவ மழைக்கால நோய்களால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதே சாட்சி. மக்களின் துயர் துடைக்க விடியா அரசே நடவடிக்கை எடுக்கும் என்று நம்பாமல், ஆங்காங்கே உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுக என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.