விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்.. வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரேமலதா!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் என்றும், அவர் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 18ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி மற்றும் காய்ச்சல் தொடர்பாக விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரமாக விஜயகாந்தின் உடல் நிலை சீராக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நுரையிரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறியது. மருத்துவமனையின் இந்த அறிக்கை தேமுதிக தொண்டர்கள் மத்தியிலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் பலரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

இன்று(நேற்று) காலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை வழக்கமான அறிக்கைதானே தவிர பயப்படவோ பதற்றமடையவோ ஒன்றுமில்லை. கேப்டன் நல்ல உடல் ஆரோக்கியடத்துடன் உள்ளார். மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள், செவிலியர்களுடன் நானும் இணைந்து தலைவரை நல்லபடியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். தலைவர் வெகு விரைவில் பூரண நலம் அடைந்து வீடு திரும்பி உங்கள் அத்தனை பேரையும் சந்திப்பார். அத்தனை பேரின் பிராத்தனையும் அவர் செய்த தர்மமும் அவரை கப்பாற்றும். கடைக்கோடி தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு நான் கூறுவது யாரும் பயப்பட வேண்டாம். கூடவே இருந்து கண்ணும் கருத்துமாக தலைவரை பார்த்துக்கொள்கிறேன். கேப்டனின் உடல்நிலை குறித்து வரும் வதந்தியை நம்ப தேவையில்லை. தலைவர் நன்றாக உள்ளார், விரைவில் வீடு திரும்புவார். இவ்வாறு பிரேமலதா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், “மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தேமுதிகவின் நிறுவனத் தலைவர் ஐயா விஜயகாந்த் அவர்கள் முழு உடல்நலம் பெற்று, விரைவில் மீண்டுவர வேண்டுமெனவும், தனது அன்றாடப் பணிகளைத் தொடர வேண்டுமெனவும் எனது பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.