தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்காக, ஆளுநர் ரவி அவற்றை உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் நாங்கள் 10 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பினோம். அதை, திருப்பி அனுப்புவதற்கு முன்பாக, ஆளுநர் என்ன காரணங்களால், இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பி வைப்பதாக குறிப்பிட்டிருந்தால், அதற்கான தகுந்த விளக்கத்தை அளித்தே அந்த மசோதாக்களை நாங்கள் திருப்பி அனுப்பியிருப்போம். ஆனால், ஆளுநர் அப்போது சும்மா திருப்பி அனுப்பிவிட்டு, தற்போது தமிழக அரசு மீண்டும் சட்டமன்றத்தில் அந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பிய உடன், தான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கின்ற நிலையில், அதற்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்காக, உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருப்பதாக, செய்திகள் வருகின்றன.
தங்களிடம் இருக்கின்ற அதிகாரம் பறிபோய்விடக்கூடாது என்ற எண்ணம் ஆளுநர்களுக்கு ஏன் வருகிறது என்று தெரியவில்லை. ஒரு மாநில அரசுக்கு ஒரு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம்கூட இருக்கக் கூடாது என நினைப்பது எந்த அளவுக்கு நியாயமானது என்பதும் புரியவில்லை. மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி மீண்டும் திருப்பி அனுப்பியிருக்கிறோம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், முதல்வரால் ஒரு குழு நியமிக்கப்படுகிறது. அந்தக் குழுவில் ஆளுநரின் பிரதிநிதியும், அரசின் பிரதிநிதியும் இருக்கிறார்கள். சிண்டிகேட்டின் பிரதிநிதியும் இருக்கிறார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான அந்த தேடுதல் குழுதான் 3 பேரை பரிந்துரை செய்தது. அதிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், ஆளுநர் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக அரசு தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? இவ்வாறு அவர் கூறினார்.