அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண குணம் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 18 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்து வந்த மருத்துவமனை நிர்வாகம் நேற்று, கடந்த 24 மணி நேரமாக அவரது உடல் நிலை சீராக இல்லை என அறிவித்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகடம் தெரிவித்தது. மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அறிக்கை தேமுதிக தொண்டர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் பலரும் விஜயகாந்த் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை இயல்பான ஒன்றுதான் என்றும் அதில் பதற்றம் அடையவோ, பயப்படவோ ஒன்றுமில்லை என்றார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தானும் அருகில் இருந்து கண்ணும் கருத்துமாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் விஜயகாந்த் செய்த தர்மம் அவரைக் காப்பாற்றும் என்றும் விரைவில் பூரண நலம்பெற்று கேப்டன் உங்களை சந்திப்பார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறினார். பிரேமலதா விஜயகாந்தின் இந்த வீடியோ தேமுதிக தொண்டர்களையும் விஜயகாந்த் ரசிகர்களையும் சற்று நிம்மதி அடைய செய்தது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண குணம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.