ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல்குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்களை சென்னை போலீசார் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதாக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அதேபோல் ஆளுநர் ஆர்என் ரவியும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திராவிடம் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் இருதரப்புக்கும் கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தான் கடந்த அக்.25-ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகை முன்பு திடீரென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பெட்ரோல் குண்டு வீசியவரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் சென்னை நந்தனம், எஸ்.எம்.நகரைச் சேர்ந்த கருக்கா வினோத் (வயது 42) என்பது தெரியவந்தது. ரவடியான இவர் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இவரிடம் நடத்திய விசாரணையின்போது நீட் தேர்வு விலக்குக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காததால் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. தற்போது அவர் மீது 14 குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
முன்னதாக ஆளுநர் மாளிகை தரப்பில், சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதாவது பெட்ரோல் குண்டு வீசியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என என சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், கருக்கா வினோத் மீது ஆளுநர் மாளிகை அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கிண்டி போலீஸாரின் புகார் மனுவை ஏற்று அதன்படி, வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல்குண்டு வீசப்பட்ட வழக்கின் முக்கியத்துவம் கருதி என்ஐஏ (தேசியபுலனாய்வு முகமை) இந்த வழக்கைவிசாரிக்க முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கின் விசாரணை விவரம், சேகரிக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட அத்தனை ஆவணங்களையும் என்ஐஏ-விடம் ஒப்படைக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கிண்டி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி தற்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை கிண்டி போலீசார் என்ஐஏ வசம் ஒப்படைத்துள்ளனர்