குரூப்4 பணியிடங்களுக்கான கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டியது கட்டாயமாகும்: ஐகோர்ட்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்4 பணியிடங்களுக்கான அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டியது கட்டாயமாகும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் காலியாக இருந்த 135 சமையலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில், அதிக வயது மற்றும் கூடுதல் கல்வித்தகுதி இருப்பதாக கூறி பலரை ஆதிதிராவிடர் நல கமிஷனர் பணி நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து சிலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதின்ற கிளை தனி நீதிபதி, கூடுதல் கல்வித்தகுதி உள்ளது என்பதற்காக பணிநீக்கம் செய்தது சரியல்ல என்று அந்த உத்தரவை ரத்து செய்தார். இதனை எதிர்த்து, ஆதிதிராவிடர் நல கமிஷனர் மற்றும் திருச்சி கலெக்டர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கலைமதி ஆகியோர் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.

விசாரணை முடிவில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறுகையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்4 பணியிடங்களுக்கான அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டியது கட்டாயம் என்றும், ஏனெனில், குறைந்தபட்ச கல்வித்தகுதி உடையவர்களின் வாய்ப்பு அதிகபட்ச கல்வித்தகுதி கொண்டவர்களால் பறிபோகிறது என்றும் கூறினார்கள். மேலும் அதிகபட்ச கல்வித்தகுதி கொண்டவர்களால் இந்த பணிகளை திறம்பட செய்ய முடிவதில்லை என்றும் ஆனால் சமவாய்ப்பை மறுப்பது என்பது அடிப்படை உரிமையை மீறுவதாகும். போட்டித் தேர்வு முறைகளில் குறைந்தபட்ச கல்வித்தகுதியை கொண்டவர்களுக்கான வாய்ப்பு என்பது குறைவாகவே உள்ளதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் நமது நாடு இன்னும் முழுமையான கல்வி வளர்ச்சியை அடையவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள். சமூக, பொருளாதார மற்றும் புவியியல் காரணிகளால் கல்வியில் ஏற்றத்தாழ்வு நிலவுவதாகவும், குறைந்தபட்ச கல்வித்தகுதியை கொண்டோர் பரிந்துரைக்கப்பட்ட பணிகளை செய்ய தகுதியானவர்கள் என்றும் அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கிய உரிமையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் கூறினார்கள். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் அதிக கல்வித்தகுதியுடையோரை 4 வாரத்திற்குள் மீண்டும் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அடிப்படை பணிகள் சிறப்பு விதிகளின்படி அதிக வயதுடையோர் நியமனம் சட்டவிரோதம் என்பதால் அவர்களால் பணியை தொடர முடியாது என்றும் குரூப்4 பணியிடங்களுக்கு அதிகபட்ச கல்வி தகுதியை நிர்ணயம் செய்வதற்கு ஏற்ப விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.