2028-ல் சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதற்கு முன்மொழிகிறேன்: மோடி!

துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி. காலநிலை சார்ந்த இலக்குகளை அடைவதில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் ஐ.நா. உலக பருவநிலை உச்சி மாநாடு நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 97 ஆயிரம் பங்கேற்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் பருவநிலை மாறுபாடு ஆர்வலர்கள் என மொத்தம் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

இந்திய பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநாட்டில் கலந்து கொண்டார். தொடர்ந்து துபாய் பால்ம் பகுதியில் நடந்த இந்திய சமூகத்தினரை சந்திக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.அப்போது துபாயில் வசிக்கும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று காலை பிரதமர் மோடி மாநாடு நடைபெறும் துபாய் எக்ஸ்போ நகர வளாகத்திற்கு சென்றார். அவரை அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர், அவர்கள் இருவரையும் கைகோர்த்து பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அவர் அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிறகு வளாகத்திற்கு வருகை புரிந்த உலக தலைவர்களை சந்தித்து பேசினார்.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச அளவில் இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

இந்தியாவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் ஆகும். ஆனால் உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக மட்டுமே உள்ளது.
மக்கள்தொகை குறைவாக உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகவும் குறைவு. காலநிலை சார்ந்த இலக்குகளை அடைவதில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் கட்டமைப்புகளை நிறைவேற்ற இந்தியா உறுதி பூண்டுள்ளது. எனவே, 2028-ல் சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதற்கு முன்மொழிகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்தநிலையில், துபாயில் நடந்த 2-வது நாள் உலக பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார்.