‘மிக்ஜாம்’ புயல் முன்னெச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ள மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்றும் நாளையும், கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக மிதமான மழை பெய்து வருகிறது. இடையே வெயில் அடித்தாலும், மழை தொடர்வதால் தரைப்பகுதிகள் ஈரப்பதமாகவே உள்ளன. தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குடியிருப்புப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தாழ்வான பகுதியில் தேங்கிய நீரை உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தினர் வெளியேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழையும், மிக கனமழையும் பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் கடலோர மாவட்டமான கடலூரில் புயலின் தாக்கம் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ளும் வகையில், சென்னை ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 55 பேர் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் மீட்பு உபகரணங்களுடன் கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். கனமழையால் பாதிப்பு ஏற்படும் இடங்களில், இவர்கள் உடனே களமிறக்கப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அவசர கால கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் 1077, 04142 – 220700, 04142 – 233933 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடலூர் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் ராஜாராம் முன்னிலையில் நேற்று மழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து அவர்கள் ராசாபேட்டையில் உள்ள புயல் எச்சரிக்கை மையம், தேவனாம்பட்டினத்தில் உள்ள மருத்துவ முகாமை பார்வையிட்டனர். தொடர்ந்து வள்ளிக்கந்தன் நகர் பகுதியில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணியையும் பார்வையிட்டனர். இதனிடையே, கனமழை தொடர்பாக கடலூர் மாவட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை பொது மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இடி,மின்னலுடன் கனமழை பெய்து வரும் போது திறந்த வெளியில் நிற்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மழை மற்றும் வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர் நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆதார் மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.