வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிச.4 – திங்கள்கிழமை) பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 290 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுபெறக்கூடும்.இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிச.4) மாலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், வடதமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொள்ளக்கூடும். அதன்பின்னர், இது வடக்கு திசையில், தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து டிச.5-ம் தேதி காலை, நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழையும், பலத்த காற்று வீசக்கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த 4 மாவட்டங்களுக்கும் நாளை (டிச.4) பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுனங்கள், வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேநேரம், அத்தியாவசிய சேவை அளிக்கும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பால், குடிநீர், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மின் துறை, போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.