இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி: பிரதமர் மோடி!

நாட்டின் ‘நாரி சக்தி’க்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

பாஜக தொண்டர்களுக்கு 4 மாநில தேர்தல் முடிவுகளும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. பட்டாசுகளை வெடித்தும், லட்டு உள்ளிட்ட இனிப்புகளை கொடுத்தும் கொண்டாடி வருகின்றனர். ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் வெற்றியை எதிர்பார்த்தாலும் எதிர்பாராத ட்விஸ்ட் ஆக சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 3 மாநிலங்களில் பாஜகவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பாரதப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்தனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஆதரவாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கைகோர்த்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, தேச விரோத சக்திகளையும், நாட்டை பலவீனப்படுத்தும் எண்ணங்களை வலுப்படுத்தும் அரசியலையும் நிறுத்த வேண்டும் என்பதே காங்கிரஸுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எனது யோசனை. இந்த தேர்தல் முடிவுகள் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மட்டும் எதிரொலிக்கவில்லை. இந்த முடிவுகளின் எதிரொலி வெகுதூரம் செல்லும்.. இந்த தேர்தல்களின் எதிரொலி உலகம் முழுவதும் கேட்கும். மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு மாற்று இல்லை. பாஜக 2 தசாப்தங்களாக ஆட்சியில் இருந்தும், நீண்ட காலத்திற்குப் பிறகும், பாஜக மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. .இந்தியா முன்னேறும் போது மாநிலம் முன்னேறி ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையும் மேம்படும் என்பதை இந்தியாவின் வாக்காளர் தெரிந்து வைத்துள்ளனர். எனவே, வாக்காளர்கள் பாஜகவை தேர்வு செய்கிறார்கள். “நாட்டின் ‘பெண்கள் சக்தி’க்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தேர்தலில் பாஜக கொடி உயரும் என்று ‘நாரி சக்தி’ தீர்மானித்துள்ளதாக எனது பேரணிகளின் போது அடிக்கடி கூறுவேன் என்றும் தெரிவித்தார். பெண்களின் வாக்குதான் பாஜகவின் வெற்றியை தீர்மானித்துள்ளதாக உறுதியாக கூறினார் மோடி.

தொடர்ந்து பேசிய மோடி, “இன்று ஒவ்வொரு ஏழையும் தானே வெற்றி பெற்றதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவரும் தேர்தலில் வெற்றி பெற்றதாக எண்ணுகிறார் என்று கூறினார். ஒவ்வொரு விவசாயியும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதாகச் சொல்கிறார். இன்று ஒவ்வொரு பழங்குடியின சகோதரன். மற்றும் சகோதரி மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார் பிரதமர் மோடி. இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்றும் பெருமிதத்துடன் கூறினார் மோடி.