மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் கண்காணிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் கூடுதலாக 7 அமைச்சர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் கண்காணிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் கூடுதலாக 7 அமைச்சர்களை நியமித்துள்ளேன். அதன்படி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசமி காஞ்சிபுரம் மாவட்டத்துற்கும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தாம்பரம் மாநகராட்சிக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவடி நகராட்சிக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் பகுதிகளுக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கும், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளுக்கும், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் சோழிங்கநல்லூர், பெருங்குடி, பெரும்பாக்கம் பகுதிகளுக்கும், வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கும் நேரடியாக சென்று நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட அறிவுறுத்தியுள்ளேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.