கனமழையால் புதுச்சேரி – சென்னை பேருந்து சேவை நிறுத்தம்: 144 தடை உத்தரவு!

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் புதுச்சேரி- சென்னை பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அலையின் உயரம் பல அடிகள் அதிகரித்துள்ளது. ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக புதுச்சேரியில் தொடர்ந்து மழை பொழிந்தப்படி உள்ளது. இருண்ட வானிலை நிலவுகிறது. அத்துடன் பலத்த காற்றுடன் கனமழை பொழியும் என்ற அறிவிப்பு வெளியான சூழலில் கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. பல அடிகளுக்கு அலை சீற்றத்துடன் உள்ளது. காலாப்பட்டு முதல் புதுக்குப்பம் வரை 15 கிராம மக்கள் மீன் பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பைபர் படகுகள், கட்டுமரங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பல மீனவ கிராமங்களில் படகுகள் பாதுகாப்பாக ஏற்றி நிறுத்தியுள்ளனர்.

சென்னை கனமழையால் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு ஈசிஆர், பைபாஸ் வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளை புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் நிறுத்தியுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்நிலை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் 34.2 மிமீ மழை பதிவானது. புயலால் புதுச்சேரியின் கடலோரக் கரையோரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தைத் தடை செய்ய நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆட்சியர் வல்லவன் பிறப்பித்த உத்தரவில், புயல் காரணமாக புதுச்சேரி கடற்கரைகளுக்கு ஆரஞ்சு நிற அலார்ட் வெளியிட்டுள்ளது. ஒரு கடுமையான சூறாவளி புயலாக, அதிகபட்சமாக 90-100 கிமீ வேகத்தில் காற்று வீசும். மேலும், தீவிர சூறாவளி புயல் காரணமாக புதுச்சேரியின் கடற்கரைக்கு அருகில் உள்ள கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களின் நடமாட்டம் அவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், உயிரிழப்போ, உடமைச் சேதமோ ஏற்படாமல் தடுக்கும் வகையில் புதுச்சேரியின் கடலோரக் கரையோரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தைத் தடை செய்வது நல்லது.

எனவே, பெரிய பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-ன் மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி உத்தரவிடுகிறேன்: புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் 05.12.2023 அன்று காலை 06.00 மணி வரை அனைத்து நபர்களின் நடமாட்டமும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் எந்தவொரு நபரும் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகளில் 35 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 12 ஏரிகள் 75% நிரம்பி உள்ளதாகவும், 3 ஏரிகள் 25 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும், மீதமுள்ள 17 ஏரிகள் கிடைமட்ட அளவு நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 25 தடுப்பணைகளில் 16 தடுப்பணைகள் முழுவதாக நிரம்பி உள்ளதாகவும், 1 தடுப்பணை 50% நிரம்பியுள்ளதாகவும் மற்ற தடுப்பணைகள் 25 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் விடுப்பின்றி பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பல இடங்களில் விழுந்த மரக்கிளைகள், மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தீயணைப்புத்துறையினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.