ஜெயலலிதா 7-ம் ஆண்டு நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வின்போது, அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உறுதி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது.

முன்னதாக, இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் அரசியல் ஆளுமை, நம் அனைவருக்கும் தலைவியாய் வாழ்ந்து, என்றென்றைக்கும் வழிகாட்டியாய்த் திகழும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்துக்கு, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (டிச.5) மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அவரது வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம். ஜெயலலிதாவின் நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலைநிறுத்தி, மக்களுக்கான ஒரே இயக்கம் அஇஅதிமுக என்பதை நம் செயலில் உறுதிப்படுத்தி, மக்கள் பணியே மகேசன் பணியாய்க் கொண்டு அயராது உழைப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.