வெள்ள தடுப்பு பணிகளை தமிழக அரசு இன்னும் செம்மையாக செய்திருக்கலாம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு சற்று கவனக்குறைவாக செயல்பட்டுள்ளதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
மழை வெள்ளத்தை எதிர்கொள்ள 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் கூறினார். ஆனால் புயலும், பெருவெள்ளமும் வரும் என்று தெரிந்திருந்தும் தமிழக அரசு சற்று கவனக்குறைவாகவே செயல்பட்டுள்ளது. இதை அரசியலுக்காக சொல்லவில்லை. வெள்ளம், புயல் வரும்போது அதை ஒரு தனிமனிதரோ, அல்லது அரசு இயந்திரமோ உடனடியாக தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் வெள்ள தடுப்பு பணிகளை தமிழக அரசு இன்னும் செம்மையாக செய்திருக்கலாம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.