சென்னை வேளச்சேரியில் உணவு கொடுக்க சென்ற பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பெண் ஒருவரும் பின்னர் அங்கிருந்த பொதுமக்களும் கோபமாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேளச்சேரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று உணவு கொடுத்து வருவதாக பாஜக தெரிவித்துள்ளது. வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதியில், முழங்கால் அளவு வெள்ள நீரில் நடந்து சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பால் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள், பிரெட் போன்றவை வழங்கப்பட்டன.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உணவு கொடுக்க சென்ற பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பெண் ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில்.. பெண் ஒருவர் அண்ணாமலையிடம்.. நாங்க சொல்றதை எங்கயாவது கேட்குறீங்களா ? யாரவது நின்று எங்கள் பேச்சை கேட்குறீங்களா? நீங்க பாருங்க நான் கொடுத்த கோரிக்கையை கூட படிக்கவில்லை. ஆனால் கிளம்பி செல்கிறீர்கள். மாறி மாறி நீங்கள் போட்டோதான் எடுக்கிறீர்கள். என்னுடைய பிரச்னையை உங்களிடம் சொல்ல வருகிறேன் ஆனால் கேட்காமல் உள்ளீர்கள் என்று அந்த பெண் கூறியுள்ளார். அதை கேட்டு அண்ணாமலை.. நீங்கள் முதலில் சாப்பிடுங்கள். அப்பறம் பேசலாம். உங்களுக்காக சாப்பாடு கொண்டு வந்திருக்கிறோம். உங்களுக்காக சாப்பாடு இருக்கிறது. முதலில் அதை சாப்பிடுங்கள். அப்பறம் கட்சி நிர்வாகிகள் உங்களிடம் கோரிக்கைகளை கேட்பார்கள். கண்டிப்பாக உங்களிடம் கட்சி நிர்வாகிகள் பேசுவார்கள் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட அந்த பெண்மணி நாங்கள் வைக்கும் கோரிக்கையை நீங்கள் ஏற்க மாட்டீர்கள். ஆனால் இப்போது சாப்பாடு மட்டும் போடுவீர்களா.. உங்கள் சாப்பாடும் வேண்டாம்.. ஒன்றும் வேண்டாம்.. நீங்கள் செல்லுங்கள்., என்று கடுமையாக பேசி உள்ளார். அங்கே இருந்த இளைஞர் ஒருவர்.. வெறும் 50 பேருக்கு சாப்பாடு கொண்டு வருகிறார்.. எப்படி பத்தும். இங்கே 1500 வீடுகள் இருக்கு. 50 பேருக்கு சாப்பாடு கொண்டு வந்துட்டு நான் உதவி செஞ்சிட்டேன் அப்படின்னு சொல்லிக்கிறாங்க? இது எல்லாம் எப்படிங்க போதுமாக இருக்கும்? நீங்களே சொல்லுங்கள். இங்கே அத்தனை பேர் சாப்பிடமல் இருக்கோம். ஆனால் இவங்க பாருங்க போட்டோ எடுக்குறாங்க, என்று கோபமாக பேசி உள்ளார்.