சென்னையில் இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உயிரிழப்புகளை தடுக்கவும் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் தான் வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜாம் என்று பெயரிடப்பட்ட இந்த புயல், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை புறட்டிப்போட்டது. கடந்த 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதிகள் பெய்த பேய்மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. விடிய விடிய பெய்த மழையால் இடுப்புக்கு மேல் தெருக்களில் தண்ணீர் தேங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பகுதிகளில் மின் மாற்றிகளும் மூழ்கின. இதனால், சென்னையின் பல இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது மழை விட்டு முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. படிப்படியாக இயல்பு நிலை மெல்ல மெல்ல எட்டி பார்த்து வருகிறது. எனினும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வெளியே வர முடியாத மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பல பகுதிகளில் இன்னும் மின்சார விநியொகம் வழங்கப்படவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர். சில இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
இந்த நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உயிரிழப்புகளை தடுக்கவும் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.