‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை போல ‘வெட் இன் இந்தியா’வும் தொடங்க வேண்டும். தொழிலதிபர்கள் குறைந்தபட்சம் தங்கள் குடும்பத்தில் ஒரு திருமணத்தையாவது உத்தரகாண்டில் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-
புனிதத்தையும் வளர்ச்சியும் ஒருசேர அனுபவிக்கும் இடமாக உத்தரகாண்ட் உள்ளது. 21 நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தம் உத்தரகாண்டிற்கானது. இந்த வளர்ச்சி என் முன்னால் நடப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். முதலீடுகளுக்கு புதிய கதவை திறக்கும் ஆற்றலை தேவபூமி கொண்டுள்ளது. கொள்கை மூலம் நடத்தப்படும் நிர்வாகத்தையும் அரசியல் நிலைத்தன்மையையும் நாடு இன்று கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா போல ‘வெட் இன் இந்தியா’ இயக்கத்தையும் முன்னெடுக்க வேண்டும். ஆரம்பத்தில் சுமார் 5 ஆயிரம் இடங்கள் திருமணத்திற்கான இடங்களாக திட்டமிடப்பட்டால், ஒட்டு மொத்த உள்கட்டமைப்பும் தயாராக இருப்பதை நீங்கள் பர்க்கலாம்.
தேசத்திற்கு இந்த ஆற்றல் உள்ளது. நமது நாட்டில் கடவுள்தான் அனைவரையும் ஜோடி சேர்ப்பதாக நம்புகிறோம். பிறகு ஏன் இந்த ஜோடிகள் தங்கள் புதிய வாழ்க்கை பயணத்தை தொடங்க வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும். ‘மேக் இன் இந்தியா’ இயக்கத்தை போல ‘வெட் இன் இந்தியா’வும் தொடங்க வேண்டும். குறைந்தபட்சம் குடும்பத்தில் ஒரு திருமணத்தையாவது உத்தரகாண்டில் நடத்த வேண்டும். உத்தரகாண்டை திருமணத்திற்கான டெஸ்டினேஷனாக மாற்ற இவ்வாறு செய்ய வேண்டும். கொள்கை சார்ந்த ஆட்சி நிர்வாகத்தை நீங்கள் பார்க்க முடியும். ஸ்திரதன்மை மிக்க அரசியல் வேண்டும் என்ற வலுவான கோரிக்கை இருப்பதை பார்ப்பீர்கள். லட்சிய இந்திய ஸ்திரதன்மையற்ற அரசை விரும்பவில்லை. வலுவான அரசையே அது விரும்புகிறது. சமீபத்திய தேர்தல்களில் இதை நம்மால் பார்க்க முடிந்தது. உத்தரகாண்ட் மக்கள் இதை ஏற்கனவே செய்து முடித்து விட்டார்கள்.
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். ஸ்திரமிக்க அரசாங்கம், கொள்கை ஆகியவற்றால் எனது மூன்றாவது ஆட்சி காலத்தில் இது நிச்சயமாக நடக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். கொரோனா பெருந்தொற்று இருந்த போதிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு நாட்டின் பொருளாதார கொள்கைகளே காரணம். விரைவில் டெல்லி – டேராடூன் இடையேயான தொலைவு 2.5 மணி நேரமாக குறைய போகிறது. இரு நகரங்களுக்கு இடையேயான சிறந்த இணைப்பு வர்த்தகத்திற்கு மட்டும் உதவாமல் வாழ்க்கையையும் எளிதாக்கும். விரைவில் செயல்படுத்த இருக்கும் கரன்பிரயாக் ரயில் கனெக்டிவிட்டி திட்டம் தளவடாங்கள், சேமிப்பு, சுற்றுலா மற்றும் பயணம், விருந்தோம்பல் ஆகிய துறைகளுக்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.