அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் டிஜிபி நட்ராஜ் மனு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் டிஜிபி நட்ராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நட்ராஜ், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பற்றியும், முதல்வர் ஸ்டாலின் பற்றியும் அவதூறு கருத்துகளை வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஷீலா என்பவர் திருச்சி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து இருந்தார்.

அந்த புகாரில், ஓய்வு பெற்ற டிஜிபி நடராஜ் வாட்ஸ் அப் குழுவில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு செய்தி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்துக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற வேண்டும் என்றால் அப்படி ஒரு வெற்றி தேவையில்லை. இந்துக்களின் வாக்குகளை பெறும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து விடவில்லை என்று முதல்வர் கூறியதாக தவறான தகவலை பகிர்ந்துள்ளார். நடராஜின் பதிவு தமிழக அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின் பேரில், நட்ராஜ் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீசார் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நட்ராஜ் சார்பில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன் முறையிடப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அது தொடர்பாக மதுரை கிளையில் தான் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தார். மதுரை கிளையில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி, எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் அதனை விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.