எடப்பாடிக்கு எதிரான டெண்டர் முறைகேடு: திமுக அரசின் அப்பீல் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறையில் ரூ 4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுகவின் 2016-2021 ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை துறை இலாகா வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ரூ 4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை 2018-ல் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு மட்டுமே கொடுத்தது, வண்டலூர் – வாலாஜா சாலை 6 வழிச் சாலையாக மாற்றப்பட்டதில் முறைகேடு உள்ளிட்டவை அந்த வழக்கில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதியால் புகார்களாகத் தெரிவிக்கப்பட்டிருந்தன.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தி இருந்தார். இவ்வழக்கில் 2018-ல் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு, உச்சநீதிமன்றம் போனது. ஆனால் வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கே வந்தது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் டிஸ்மிஸ் செய்தார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை 2018-ல் நடத்தப்பட்ட தொடக்க விசாரணையில் குறைகள் இல்லை. புதிய விசாரணைக்கு நடத்துவதற்கு காரணமுமில்லை. ஆட்சி மாற்றம் ஒன்றையே காரணமாக காட்டி புதிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது என்பதால் ஆர்.எஸ்.பாரதி மனு டிஸ்மிஸ் செய்யப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதனடிப்படையில் விசாரணை நடத்தலாம் எனவும் அப்போது நீதிபதிகள் தெரிவித்தனர். இதே வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.