அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம பேச்சு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். மேலும், குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது என்றும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் கடமை தவறிவிட்டனர் எனவும், இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும் என தெரிவித்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனி நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் சேகர் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனி நீதிபதியின் கருத்து தவிர்த்திருக்க கூடியது மட்டுமின்றி தேவையற்றது. சட்டப்படி நிலைக்கத்தக்கதல்ல என தெரிவித்துள்ளார். மேலும், தீர்ப்பு வழங்கும் போது நீதிபதிகள் கூறக்கூடிய கருத்துகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையில், அதனை நீதிபதி பின்பற்றவில்லை எனவும், மேலும் வழக்கில் ஒருவர் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாத நிலையில் அவரை பற்றி கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டுமென உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சனாதன பேச்சு தொடர்பாக தொடரப்பட்ட கோ வாராண்டோ வழக்கு மற்றொரு நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாமல் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். தனி நீதிபதியின் கருத்தை அரசியல் எதிரிகள் தவறாக பயன்படுத்தி வருவதாகவும் தங்களை கேட்காமல் இந்த கருத்தை கூறியது அடிப்படை உரிமையை மீறிய செயல் என்பதால், தனி நீதிபதி கருத்துகளை நீக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.