திமுக அரசும், அமைச்சர்களும் சென்னை மக்கள் மீது அக்கறை காட்டவில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
மிக்ஜம் புயல் பாதிப்புக்கு அரசின் அலட்சியமே காரணம். பெரும்பாலான பகுதிகளில் முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை. புயல் பாதிப்பு தொடர்பாக திமுக ஆட்சியில் முன்கூட்டியே அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மண்டல வாரியாக முறையாக அதிகாரிகளை நியமித்து ஆலோசனைகளை அரசு வழங்கவில்லை. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி மக்கள் அவதியடைந்தனர். திமுக மாநாட்டிற்கு செலவுசெய்த நேரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை பார்த்திருந்தால் நீர் தேங்கியிருக்காது.
மழை பெய்தால் ஒரு சொட்டு கூட தேங்காது என அரசு கூறியது, ஆனால் குளம் போல் மழை நீர் நின்றது. மழைநீர் வடிகால் பணிகள் குறித்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. திமுக அரசும், அமைச்சர்களும் சென்னை மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. வடிகால்வாய் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.