இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரை, முதல்வர் ரேவந்த் ரெட்டி மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான கே சந்திரசேகர ராவ் கடந்த வெள்ளிக்கிழமை எர்ரவல்லியில் உள்ள தனது பண்ணை வீட்டின் குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். இதில் கேசிஆரின் இடுப்பில் இடதுபக்க எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து ஹைதராபாத்தின் சோமஜிகவுடா பகுதியில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து கேசிஆரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அவர் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஆகும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் தலைவருமான கே.சந்திரசேகர் ராவை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் கேசிஆரின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடமும் ரேவந்த் ரெட்டி விசாரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, கே.சி.ஆரின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கேசிஆரிடம், “விரைவாக குணமடைந்து, தெலங்கானா சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்குமாறும் கேசிஆரை கேட்டுக் கொண்டதாகவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். மேலும் மக்களுக்கு நல்லாட்சி வழங்க அவரது ஆலோசனை தேவை என்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரை, முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்தித்து பேசிய நிகழ்வை அரசியல் நாகரிகமாக பார்க்கப்படுகிறது. கேசிஆரை, ரேவந்த் ரெட்டி சந்தித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. கேசிஆர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.