மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்காமல், வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும். தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்குவது பாராட்டக்குரியது. அந்தத் தொகையை ரேஷன் கடைகள் மூலம் அல்லாமல் நேரடியாக கொடுக்க வேண்டும்.
ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக கொடுப்பதால், அதிகளவில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால்உண்மையாகவே பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண நிதி கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களுக்கான தொகையை அரசு,நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. எனவே, இந்த நிவாரணத் தொகையையும் வங்கி கணக்கில் செலுத்துவதில் அரசுக்கு எந்தவிதமான சிரமும் இருக்காது. எனவே, நிவாரணத் தொகையை நேரடியாக கொடுக்காமல், வங்கிக் கணக்கில் செலுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.