குழந்தையின் உடலை அட்டைப்பெட்டிக்குள் வைத்து கொடுத்த மருத்துவமனை பணியாளர் சஸ்பெண்ட்!

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இறந்தே பிறந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டிக்குள் வைத்து கொடுத்த பிணவறை பணியாளர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் மசூத்-சவுமியா தம்பதி. இத் தம்பதியினருக்கு டிச.5ம் தேதி, மிக்ஜாம் புயல் பாதிப்பின் காரணமாக நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. பெரும் போராட்டத்துக்குப் பின்னர், புளியந்தோப்பு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சவுமியாவை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்குள்ள மருத்துவமனை பூட்டியிருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து சவுமியாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காவல்துறை உதவியுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு, மருத்துவர்களும், பணியாளர்களும் இருந்தபோதும், மருத்துவமனையில் மின்சார வசதி இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து சவுமியா ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு சவுமியாவுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

அங்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தை மசூத்-சவுமியா தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் பிணவறை பணியாளர்கள் இறந்த குழந்தையை முறையாக துணிகளைச் சுற்றி பெற்றோரிடம் ஒப்படைக்காமல், அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அட்டைப்பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட குழந்தையை அவரது தந்தை எடுத்துச் செல்லும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வந்தது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்த குழந்தையின் உடலை சரியான முறையில் ஒப்படைக்காத பிணவறை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பிணவறை பணியாளர் பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்ப்டடுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, பன்னீர்செல்வம் பணியிடை நீக்கத்தில் இருப்பார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி கூறுகையில், “இறந்த குழந்தையை பிணவறையில் இருந்து கொடுப்பதற்கு லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இச்சம்பவம் தொடர்பாக, குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரிடமும் விளக்கம் கேட்டு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. இறந்தே பிறக்கும் குழந்தைகளின் உடலை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கொடுக்க வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.