அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலையில் தொடர்பு உடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபரும் ஆன கே.என்.ரமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆ தேதி அன்று அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் அவரது உடல் கல்லணை சாலையில் உள்ள காவிரிக்கரையோரம் உள்ள முட்புதரில், அவரது கைகள் மற்றும் கால்கள் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளம்பி இருந்த நிலையில் கொலை நடந்து 13 ஆண்டுகளை கடந்த பிறகும் இதுவரை ஒருவரை கூட காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை. வழக்கு தொடர்பாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கடந்த 2012ஆம் ஆண்டு சிபிசிஐடி விசாரணைக்கும், பின்னர் 2017ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டது.
2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சி அமைந்த உடன் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்தது. வழக்கில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் 13 ரவுடிகளை பிடித்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் வள்ளுவன் நகர் பகுதியை சேர்ந்த பிரபு என்கிற பிரபாகரன் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாமகவில் பொறுப்பில் இருந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். திருச்சி அரசு மருத்துவமனை அருகே தனியார் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தை நடத்தி வரும் பிரபாகரன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. திருட்டு வாகனங்களை வாங்கி அடையாளம் தெரியாமல் மாற்றி விற்பதில் வல்லவர் என அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கத்தியை காட்டி மிரட்டியதாக ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட பிரபாகரன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து இருந்தார். நேற்றிரவு 7 மணி அளவில் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஆஜராகி பிரபாகரன் கையெழுத்திட்டுள்ளர். பின்னர் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து மது அருந்திய நிலையில்தான் அங்கு முகமூடிகள் அணிந்து இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் அவரை சரமாரியாக வெட்டி கொன்றனர்.
கொலை செய்யப்பட்ட பிரபாகரனிடம் கடந்த 9ஆம் தேதி அன்று ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராமஜெயம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெர்ஷா ரக கார் யாரிடம் இருந்து யாருக்கு விற்கப்பட்டது என்பது தொடர்பாக பிரபாகரனிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்கு நாளைய தினம் மீண்டும் ஆஜராக இருந்த நிலையில் பிராகரன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
