சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து தலைமை பதிவாளர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகியோரும், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரும் விடுவிக்கப்பட்டதற்கும், விடுதலை செய்யப்பட்டதற்கும் எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதில், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பொன்முடி மற்றும் ஓ.பன்னீர் செலவம் தொடர்பான வழக்குகள் இன்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் தாம் இணைக்கப்பட்டுள்ளதாக தமது தரப்பு வாதத்தை முன்வைக்க அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் மட்டுமல்ல அனைத்து வழக்குகளிலும், உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என்பது குறித்து தலைமை பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதி தெரிவித்தார். அனைத்து வழக்குகளிலும் பதில் அளிப்பதாகவும் அதற்கு அவகாசம் வேண்டுமென கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை ஜனவரி மாதம் எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.